உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தில்லையுள் கூத்தனுக்கு தெவிட்டாத அபிஷேகம்

தில்லையுள் கூத்தனுக்கு தெவிட்டாத அபிஷேகம்

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில், வேத மந்திரங்கள் முழங்க, நடராஜர், சிவகாமியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது; ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். திருப்பூர் விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர் கோவிலில், மார்கழி திருவாதிரை திருநாளான, ஆருத்ரா தரிசன விழா, 17ல், மாணிக்கவாசகர் திருவெம்பாவை உற்சவத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், சிவகாமி உடனமர் நடராஜருக்கு, திருக்கல்யாணம் மற்றும் மாங்கல்ய நோன்பு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, சிவகாமியம்மன் மற்றும் நடராஜருக்கு, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் உள்ளிட்ட, 16 திரவியங்கள் மூலம், அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சியளித்து, எம்பெருமான் அருள்பாலித்தார். சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி, பட்டி சுற்றுதல், வீதி <உலா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

நல்லூர் விஸ்வேஸ்வரர் கோவில்: நல்லூரில் உள்ள, பழமையான, விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர், சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, நேற்று நடைபெற்றது. நேற்று முன்தினம் திருக் கல்யாணம், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு திருவெம்பாவை, மூல மந்திரங்கள் முழங்க, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பால், தயிர், இளநீர், கரும்புசாறு, பழ வகைகளால் அபிஷேகம் நடந்தது. நேற்று காலை, 6:30 மணிக்கு, ஆருத்ரா தரிசனம் நடந்தது. தொடர்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

சுக்ரீஸ்வரர் கோவில்: எஸ்.பெரியபாளையத்தில் உள்ள, ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு ருத்ர ஜெப ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் திருப்பாவை, மூல மந்திரங்கள் முழங்க, பால், தயிர், இளநீர், பழச்சாறு, பஞ்சாமிர்தம், பஞ்சகவ்யம், கரும்புசாறு, தேன் உள்ளிட்ட திரவியங்களால், நடராஜருக்கு அபிஷேகம் செய்தனர். நேற்று காலை, 7:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில், சிவகாமியம்மனுடன் நடராஜர் ஆருத்ரா தரிசன காட்சியளித்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், 17ல் காப்பு கட்டுதலுடன், ஆருத்ரா மஹா தரிசன விழா துவங்கியது. தினமும் காலை, மாலையில் மாணிக்கவாசகர் வீதியுலா, திருவெம்பாவை பாராயணத்துடன் நடந்தது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, நடராஜ பெருமான், சிவகாமியம்மைக்கு மகாபிஷேகம் துவங்கியது.

விபூதியில் துவங்கிய மகாபிஷேகம், அன்னம், கரும்பு சர்க்கரை, திருமஞ்சனம், நல்லெண்ணெய், வில்வப்பொடி, அரிசி மாவு, மஞ்சள், பஞ்சாமிர்தம், நெய், தேன், திராட்சை, மாதுளை, ஆப்பிள், எலுமிச்சை, 108 லிட்டர் பால், 108 இளநீர், தயிர் என, 48 திரவியங்களால் செய்விக்கப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத பாராயணம் செய்ய, ஓதுவா மூர்த்திகள் திருமுறைகளை பண்ணிசைக்க, நாதஸ்வர மேளம் முழங்க, சிவகாமியம்மையுடன் நடராஜ பெருமான், ஆனந்த தாண்டவ அலங்காரத்தில் காட்சியளித்தார். திரண்டிருந்த பக்தர்கள், "தில்லையுள் கூத்தனே, தென்பாண்டி நாட்டானே என கோஷமிட்டு, சுவாமி தரிசனம் செய்தனர். அரச மரத்தடி விநாயகரை சுற்றி, பட்டி சுற்றல் நடைபெற்று, சுவாமி புறப்பாடு, நான்கு ரத வீதிகளில் நடந்தது.

திருப்பூர் ஜே.எம்., எண்: 2 மாஜிஸ்திரேட் வேலுசாமி, அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹர்ஷினி உட்பட பலர் பங்கேற்றனர். டி.எஸ்.பி., ராமசாமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை, செயல் அலுவலர் அழகேசன் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு மஞ்சள் சரடு, குங்கும பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, பழநி சண்முகசுந்தர தேசிகர், கரூர் குமார சுவாமிநாத தேசிகர் மற்றும் குழுவினரின், தேவார, திருமுறை இன்னிசை, பெங்களூரு சவுபர்ணிகா மகேஷ்குமாரின் நாட்டியாஞ்சலி, மைசூரு ஸ்ரீகண்டன், ரங்கசாமி, உடுமலை சேகர் குழுவினர் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !