இறைவனை நினைத்தால் நற்கதி கிடைக்கும்
பெ.நா.பாளையம்: “இறைவனை நினைத்து, கோவிந்தா! கோவிந்தா! என நெஞ்சுருக வேண்டினால், நற்கதி கிடைக்கும்,” என, திருச்சி கல்யாணராமன் பேசினார். கோவை மருதமலை ரோடு, நியூ தில்லை நகர், ஆர்.பி.எம்., வித்யாலயத்தில் கோவை பக்தி சொற்பொழிவு மன்றம் சார்பில், வில்லிபாரதம் சொற்பொழிவு நேற்று துவங்கியது. இதில், ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: பஞ்சபாண்டவர்கள் துரியோதனனுடன் சூதாடினார்கள். திரவுபதி உட்பட அனைத்து செல்வங்களையும் இழந்தனர். திரவுபதியின் புடவையை பிடித்து இழுத்து, துச்சதானன் அவமானம் செய்தான். திரவுபதி, கோவிந்தா கோவிந்தா என கதறினாள். கோவிந்தனை வேண்டியதால், திரவுபதிக்கு புடவை கிடைத்தது. பகவானை விட உயர்ந்தது, பகவான் நாமம். சாதாரண மனிதன் என் பெயரை சொன்னால் காரியம் நடக்கும் சொல்லும் போது, கடவுள் பெயரை சொன்னால் காரியம் நடக்கும் என்ற தத்துவத்தை இந்த உலகுக்கு விளக்கிய சம்பவம் இது. உயிர் போகும் போது, கோவிந்தா! கோவிந்தா! என இறைவன் நாமத்தை சொன்னால் நற்கதி கிடைக்கும்.இவ்வாறு, திருச்சி கல்யாணராமன் பேசினார். வில்லிபாரதம் தொடர் சொற்பொழிவு ஜன., 14 வரை தினமும் மாலை, 6:00 மணியிலிருந்து, 8:00 மணி வரை நியூதில்லை நகர் ஆர்.பி.எம்., வித்யாலயத்தில் நடக்கிறது.