உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்களுக்கு வினியோகம் செய்ய தி.மலை தீப மை பிரசாதம் தயார்!

பக்தர்களுக்கு வினியோகம் செய்ய தி.மலை தீப மை பிரசாதம் தயார்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களுக்கு வினியோகம் செய்ய, கார்த்திகை தீப மை பிரசாதம் தயாரித்து, பாக்கெட் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில், கடந்த மாதம், 25ம் தேதி, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. பின், இந்த மஹா தீபம் ஏற்றிய கொப்பரையிலிருந்து தீப மை எடுத்து, ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜருக்கு முதலில் சாத்தப்பட்டது. இதையடுத்து, பக்தர்களுக்கு இந்த பிரசாத மை வினியோகம் செய்யப்பட உள்ளது.இந்த மஹா தீப மையை தினமும் நெற்றியில் இட்டால், எவ்வித அசம்பாவிதமும் நடக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், தீப மை பிரசாதத்திற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.சில ஆண்டுகளுக்கு முன், இலவசமாக வழங்கப்பட்ட தீப மை பிரசாதம், தற்போது, 10 கிராம் எடையுள்ள குப்பியில் அடைக்கப்பட்டு, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், ஆண்டுக்கு, ஐந்து முதல் ஏழு லட்சம் ரூபாய் வரை கோவில் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைத்து வருகிறது. இந்த தீப மை பிரசாதத்தை குப்பிகளில் அடைத்து, அதனுடன் விபூதி, குங்குமம் இணைத்து பாக்கெட் செய்யும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில், தீப மை பிரசாதம் விற்பனை செய்யப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !