உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 12ம் நூற்றாண்டு புலிக்குத்திக்கல் கண்டுபிடிப்பு!

12ம் நூற்றாண்டு புலிக்குத்திக்கல் கண்டுபிடிப்பு!

பொள்ளாச்சி அருகே சிங்காநல்லுாரில், கி.பி., 12-13ம் நுாற்றாண்டுகளை சேர்ந்த புலிக்குத்திக்கல்லை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் அடங்கிய குழுவினர் கண்டறிந்தனர். பொள்ளாச்சி அருகே அமைந்துள்ளது சிங்காநல்லுார். இங்குள்ள அரசு உயர் நிலைப்பள்ளி அருகே விநாயகர் கோவிலின் முன்புறத்தில் ஒரு புலிக்குத்திக்கல் சிற்பம் உள்ளது. இந்த சிற்பத்தினை பார்த்த கோவையை சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் மற்றும் அவிநாசியை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் ஜெயசங்கர் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அது, 12-13ம் நுாற்றாண்டுகளை சேர்ந்த புலிக்குத்திக்கல் பழமையானது என கண்டறியப்பட்டது. கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் கூறியதாவது: கொங்கு நாடு பழங்காலத்தில், காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தைக்கொண்டிருந்தது. பத்து- பதினொன்றாம் நுாற்றாண்டில், சோழர் கொங்கு நாட்டை கைப்பற்றி கொங்குச்சோழரை கொண்டு ஆட்சி நடத்திய பின்னரே, வேளாண்மை பெருகியது. எனவே, ஆனைமலையை அரணாகக்கொண்ட பொள்ளாச்சி பகுதியில், கால்நடை வளர்ப்பு மிகுதியும் இருந்ததில் வியப்பில்லை.

காடுகள் சூழ்ந்த பகுதியானதால் புலிகளால், கால்நடைகளுக்கு ஆபத்து இருந்தது. கால்நடைகளை பாதுகாக்க காவல் வீரர்கள் பணியிலிருந்தனர். காவலின் போது, வீரர்கள் கால்நடைகளை தாக்க வரும் புலிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. புலிகளுடன் போரிட்டு அவற்றை கொன்ற நிகழ்வில் இறந்த வீரர்களுக்கு ஊரார் கல் நாட்டி வழிபடுவது பண்டைய வழக்கம். இந்நடுகற்களை கோவைப்பகுதியில் புலிக்குத்திக்கல் என்றும், நரிகடிச்சான் கல் என்றும் அழைப்பர். புலியை பெருநரி என்று பழங்கா லத்தில் அழைப்பது வழக்கம். சிங்காநல்லுாரில் காணப்படும் புலிக்குத்திக்கல்லும் மேற்சொன்னது போன்ற, கால்நடைகளை காக்கும் பணியில் இறந்த வீரனுக்கு எழுப்பப்பட்ட நினைவுக்கல்லாகும்.

புலியுடன் போரிடும் காட்சி சிற்பமாக செதுக்கம்: சிற்பத்தில் வீரன் மிக நெருக்கமான நிலையில், புலியுடன் போரிடும் காட்சி புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக கொங்குப்பகுதியில் கிடைக்கும் புலிக்குத்திக்கற்களில் வீரன் ஒரு கையால் தன் குறுவாளை புலியின் வாய்ப்பகுதியில் குத்துவது போலவும், இன்னொரு கையால் நீண்ட வாள் ஒன்றினை புலியின் வாய்ப்பகுதியில் பாய்ச்சுவது போலவும் அமைந்திருக்கும். சிங்காநல்லுாரில் இருக்கும் புலிக்குத்திக்கல்லில், நீண்ட வாளுக்கு மாற்றாக, கோடாரி ஒன்று காணப்படுவது சிறப்பு. குறுவாள் புலியின் நெஞ்சுப்பகுதியில் நுழைந்து விட்டபடியால் வீரனின் கை மட்டுமே தெரியும்படி உள்ளது. புலி தன் பின்னங்கால்களில், நின்ற நிலையில், முன்னங்கால்களால் வீரனைத் தாக்குகின்றது. புலியின் சினம் மிக்க நிலையை விரிந்த கண்களும், உயரத்துாக்கிய அதனுடைய வாலும் சுட்டிநிற்கின்றன. வீரனின் தலைப்பகுதியில் தலைப்பாகை காணப்படுகிறது. தலையின் வலது பக்கமாக கொண்டையுள்ளது. காதுகளில் காதணியும், கைகளில் வளையும், கால்களில் கழலும் அணிந்திருக்கிறான். இடைப்பகுதியில், ஆடைக்கச்சும், முழங்கால்வரை ஆடையும் காணப்படுகின்றன.வேளாண்மை பெருகிய பின்னரும் கால்நடை வளர்ப்பு தொடர்ந்து வந்துள்ள நிலையில், நாயக்கர் ஆட்சி வரையில், கி.பி., 14-15 நுாற்றாண்டு புலிக்குத்திக்கற்கள் காணப்படுகின்றன.

இங்கே சிங்காநல்லுார் புலிக்குத்திக்கல் வீரனின் உருவம் எளிமையாக இருப்பதும், வழக்கத்துக்கு மாறான ஆயுதமாக கோடரி காணப்படுவதையும் நோக்கும் போது சிற்பம் கி.பி., 12-13 நுாற்றாண்டுகளை சார்ந்தது என கொள்ளுவது தவறில்லை. காட்டுப்பகுதியில் எறிந்து விடாமல் கோவிலோடு சேர்த்து பாதுகாப்பாக வைத்திருக்கும் சிங்காநல்லுார் ஊர் மக்களை பாராட்டலாம். பண்டைய வாழ்க்கை முறைகளை தற்கால மக்கள் தெரிந்து கொள்ள உதவுகின்றன என்றார். -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !