காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிய உற்சவர் சிலை?
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், தற்போதுள்ள உற்சவர் சிலைக்கு பதிலாக, புதிய சிலை செய்ய, அதிகாரிகள் முடிவு செய்திருப்பது, பக்தர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில் முக்கியமானது, ஏகாம்பரநாதர் கோவில். பஞ்ச பூத ஸ்தலங்களில், ப்ருத்வி எனப்படும், மண் ஸ்தலம் இது; கோவில் மூலவர், மணல் லிங்கம் என்பதால், மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. உற்சவருக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும். உற்சவர் சிலை மிகவும் பழமையானது; பஞ்ச லோகங்களால் உருவாக்கப்பட்டது. கடந்த பங்குனி பிரம்மோற்சவத்தின் போது, சுவாமி வீதியுலா நடந்தது. அதன் பின், உற்சவர் சிலை பழுதடைந்துள்ளதாகக் கூறி, சிலையை மாற்றும் படி, அர்ச்சகர்கள் சார்பில், கோவில் நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. பழுது உள்ளது என தெரிவித்து, ஜூலை மாதம், வசந்த உற்சவம் நடைபெறவில்லை.
உற்சவர் சிலையை, அறநிலையத்துறை ஸ்தபதிகள் ஆய்வு செய்து, சிலையில் சிறு சிதைவு ஏற்பட்டுள்ளது; அதை சரி செய்து பயன்படுத்தலாம்; புதிய சிலை தேவையில்லை என, பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதிய உற்சவர் சிலை செய்யவும், சேதமடைந்த உற்சவர் சிலைக்கு, தங்க கவசம் செய்யவும், கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு தேவையான, 2.4 கிலோ தங்கம்; 85 ஆயிரம் ரூபாய் செய்கூலி, உபயதாரர்கள் உதவியுடன் செய்யப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு, கோவிலின் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இது, பக்தர்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, பழைய சிலையையே பயன்படுத்த வேண்டும்; புதிய சிலை தேவையில்லை என வலியுறுத்தி, போராட்டம் நடத்துவது குறித்து, ஏகாம்பரநாதர் கோவில் பக்தர்கள் ஆலோசித்து வருவதாக, முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் ரகு தெரிவித்தார்.
பழைய சிலையை பயன்படுத்த முடியாது என, தலைமை ஸ்தபதி முத்தையா தெரிவித்த கருத்துருவின் படி, புதிய உற்சவர் சிலை செய்ய, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். பழைய சிலைக்கு தங்க கவசம் செய்து பூஜிக்க, உபயதாரர்கள் மூலம் மட்டுமே, தங்கம் பெற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உபயதாரர்கள் வழங்கிய சிலை, சிற்ப சாஸ்திரப்படி இல்லை; எனவே, புதிய சிலை செய்ய உள்ளோம். முருகேசன், செயல் அலுவலர், ஏகாம்பரநாதர் கோவில்.