பல்லவர் கால சிற்பங்கள் பண்ருட்டி அருகே கண்டெடுப்பு!
பண்ருட்டி: பண்ருட்டி அருகே, 1300 ஆண்டுகளுக்கு முந்தைய, பல்லவர் கால சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே சி.என். பாளையம் உச்சிப்பிள்ளையார் கோவிலில், பொங்கல் பண்டிகையின் காணும்பொங்கல் திருவிழாவையொட்டி, மூன்று நாட்களுக்கு முன் பராமரிப்பு பணி நடந்தபோது பழங்கால செங்கற்களும், பானை ஓடுகளும் கிடைத்தன. இவற்றை, கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன், சி.என்.பாளையம் தமிழ் பேராசிரியர் வேல்முருகன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். பின்னர், நிருபர்களிடம் கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் கூறியதாவது: சி.என். பாளையம் உச்சிப்பிள்ளையார் கோவில் கி.பி. 6ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது என அறியப்படுகிறது. இக்கோவிலும், ஊரும் 5000 வருடத்திற்கு முந்தையவை. இங்கு கிடைத்துள்ள கருப்பு, சிவப்பு பானை ஓடுகளும், செங்கற்களும் இதை உறுதிப்படுத்துகின்றன.
1300 ஆண்டுகளுக்கு முன்பு மலையாண்டவர் கோவில் என்ற பெயரில் சிவன் கோவிலாக இருந்த இக்கோவில், பிற்காலத்தில் புதுப்பிக்கப்பட்டபோது பிள்ளையார் கோவிலாக அழைக்கப்பட்டது. இங்கு கண்டறியப்பட்ட சப்த கன்னியரில், தற்போது இரண்டு கன்னியர் சிற்பங்கள் மட்டுமே உள்ளன. மற்ற ஐந்து கன்னியர் சிற்பங்கள் இந்த மலைக்குள் புதைந்துள்ளன. 92 செ.மீ., உயரம், 43 செ.மீ., அகலம் கொண்ட சிற்பம் -மகேசுவரி என்றும், 86 செ.மீ., உயரம், 50 செ.மீ., அகலம் கொண்ட சிற்பம் பிராமி என்றும் அறியப்பட்டுள்ளன. இக்கோவில் கொடிமர பீடத்தின் அடி பகுதியிலுள்ள செப்புத் தகட்டில், ராசராசேசுவரர் சந்நிதி என பொறிக்கப் பட்டிருப்பதால், முதலாம் ராசராச சோழர் காலத்தில் இக்கோவில் மீண்டும் புனர் நிர்மானம் செய்யப்பட்டு இருக்கலாம். இங்கு, பல்லவர், சோழர், விஜயநகர நாயக்கர் கால சிவ லிங்கங்களும், சிற்பங்களும் காணப்படுவதால், முந்தைய காலங்களில் இருந்த கோவில் முற்றிலும் சிதைவுற்று, 500 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக எழுப்பப்பட்டிருக்கலாம். இவ்வாறு, கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் கூறினார்.