தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா, பக்தர்கள் வழிபாடு
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை பெருமாள் கோயில் தெரு பகுதியில் உள்ள தியாக வினோத பெருமாள் கோயிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று முடிவு பெற்றதை தொடர்ந்து கடந்த மார்ச்.13ம் தேதி மாலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று முடிந்தவுடன் இன்று காலை பூர்ணாகுதி முடிந்து புனித நீர் அடங்கிய கடங்களை அர்ச்சகர்கள் காலை 9:00 மணிக்கு மேள,தாளங்கள் முழங்க கோயிலை சுற்றி ஊர்வலமாக வலம் வந்த பின்னர் கோபுர கலசங்களுக்கு கொண்டு சென்றனர். அங்கு பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வானில் ஏராளமான கருடன்கள் வட்டமிட அர்ச்சகர்கள் காலை 9:40 மணிக்கு புனித நீரை கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு 18 வகையான மூலிகை பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. கோயிலுக்கு முன்பாக அன்னதானம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், பக்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.