உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கோவில் கோபுர பணிகள்

குருவாயூர் கோவில் கோபுர பணிகள்

குருவாயூர் : பிரசித்திப் பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவில் கிழக்கு சன்னிதியில், கோபுரத்தில் இருந்த ஆறு கருங்கல் தூண்கள், வெள்ளியில் சிற்ப வேலைப்பாடுகளுடன் வேயப்பட்டு, சுவாமிக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில், பிரசித்திப் பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கிழக்கு சன்னிதி கோபுர நுழைவு வாயிலில், ஆறு கருங்கல் தூண்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இத்தூண்களை, தமிழக கும்பகோணம் குருவாயூர் பக்த ஜன சபா சார்பில், வெள்ளியால் வேய்ந்து, காணிக்கையாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

இச்சபாவைச் சேர்ந்த ரவிச்சந்திரன், ரங்கமணி ஆகிய நிர்வாகிகள், சிற்பி பாலு ஆகியோர் கோவிலில் இதற்கான அனுமதி பெற்றனர். பின்னர் இதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. 75 லட்சம் ரூபாய் செலவில், நூறு கிலோவுக்கும் அதிகமான வெள்ளி தகடுகள் பயன்படுத்தி, கோபுரத்தில் உள்ள தலா ஒன்பது அடி உயரம் கொண்ட, ஆறு கருங்கல் தூண்களையும் வெள்ளி தகடுகளால் வேயும் பணி துவங்கியது. இதில், வெள்ளி தகடுகளில், சிற்பி பாலு தலைமையிலான குழு, அரச இலையில் கண்ணன், குருவாயூரப்பன், யானை, தாமரை, அன்னப் பறவை, சங்கு, சக்கரம், பூக்கள், உண்ணிக் கண்ணன் போன்ற வடிவங்கள் செதுக்கப்பட்டு, தூண்களில் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர, பெண்ணின் கையில் தீபம் ஏந்தியிருக்கும் கல்லினால் ஆன மூன்று விளக்குகளும் வெள்ளியினால் வேயப்பட்டது.

இப்பணிகள் முடிவடைந்து, நேற்று முன்தினம் காலை 6.30 மணிக்கு சீவேலிக்கு (உற்சவ மூர்த்தி யானை மீதேறி கோவில் பிரகாரத்தை வலம் வரும் நிகழ்ச்சி) முன்பாக, சுவாமிக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தீபங்களில் நெய் ஊற்றி விளக்கேற்றப்பட்டது. கோவில் நிர்வாக அதிகாரி கே.எம். ரகுராமன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கும்பகோணம் குருவாயூர் பக்த ஜனசபா நிர்வாகிகள் ரவிசந்திரன், ரங்கமணி, சிற்பி பாலு உள்ளிட்டோருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக உதவி அதிகாரி சோமசுந்தரன், மேலாளர் முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே கும்பகோணம் குருவாயூர் பக்த ஜனசபா நிர்வாகிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன், கோவிலின் கிழக்கு வாசலில், வாசக்கால் முழுவதும் வெள்ளியால் வேய்ந்து காணிக்கையாக வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !