திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி
நாமக்கல்: திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல், கட்டுரை போட்டியில், மாவட்டம் முழுவதும் இருந்து, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இந்துசமய அறநிலையத்துறை சார்பில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கான, திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல், கட்டுரை போட்டி, நாமக்கல்லில் நடந்தது. போட்டியில், முதல் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, ஒன்பது முதல், பிளஸ் 2 வரை என, மூன்று பிரிவுகளாக பிரித்து போட்டி நடத்தப்பட்டது. அதில், மாவட்டம் முழுவதும் இருந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இணை ஆணையர் மங்கையர்கரசி தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, நாமக்கல் எம்.எல்.ஏ., பாஸ்கர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஒவ்வொரு பிரிவிலும், தலா, 12 பேர் வீதம், மொத்தம், 36 பேர் வெற்றி பெற்றனர். மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும், சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் கிருஷ்ணன், ரமேஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.