யார் கற்பூர புத்தி கொண்டவர்கள் சுவாமி சிவயோகானந்தா பேச்சு
மதுரை: மதுரை தமிழ் இசைச் சங்கம் சார்பில் மகாபாரத கதாபாத்திரங்கள் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.மகாபாரதத்தில் விதுரர் என்ற தலைப்பில் சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா பேசியதாவது: நல்ல உபதேசங்கள் நமது அறியாமையை நீக்கி அறிவை தெளிவுபடுத்துகின்றன. மகாபாரதத்தில் பல உபதேசங்களை வழங்கிய ஒரு ஒப்பற்ற ஞானி விதுரர். நம் மனசாட்சியின் குரல் தான் விதுரர். மனசாட்சியின் குரலை பின்பற்றிய பாண்டவர்கள் வெற்றி பெற்றனர், அலட்சியப்படுத்திய கவுரவர்கள் அழிவை சந்தித்தனர். விதுரர், தன் சகோதரரான திருதராஷ்டிரருக்கு கூறும் அறிவுரைகள் விதுர நீதி என அழைக்கப்படும். அதில் யார் பண்டிதன், அந்த அறிவுடையவரின் பண்புகள் என்ன என்பதை விதுரர் கூறுகிறார். ஒரு செயலை செய்பவர்கள், அதன் நன்மை, தீமைகளை ஆராயும் பக்குவம் கொண்டவர்கள், காலத்தை வீணடிக்காதவர்கள், மனம், புலன்களை கட்டுப்படுத்தி, எளிதில் புரிந்து கொள்ளும் கற்பூர புத்தி உடையவர்கள். ஆசைகளால் துாண்டப்பட்டு காரியம் செய்யாதவர்கள், எதிலும் அனாவசியமாக தலையிடாதவர்களே அறிவுடையவர்கள் என விதுரர் கூறுகிறார். இவ்வாறு பேசினார்.