மாசாணியம்மன் குண்டம் விழா பொள்ளாச்சியில் ஆலோசனை
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி, பாதுகாப்பு வசதிகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம், பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலையில், பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், குண்டம் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு வரும் பிப்., 8ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி, மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தாசில்தார் ஜெயசித்ரா, சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயந்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் கார்த்திக் விழா குறித்து பேசினார்.
கூட்டத்தில், வரும் பிப்., மாதம் 8ம் தேதி காலை 6:00 மணிக்கு மேல், 7:00 மணிக்குள் கொடியேற்றம், 21ம் தேதி நள்ளிரவு, 1:00 மணிக்கு மேல் மயான பூஜை, 22ம் தேதி காலை, 6:00 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் சக்தி கும்பஸ்தாபனம், மாலை, 6:30 மணிக்கு மகா பூஜை, 23ம் தேதி காலை, 10:30 மணிக்கு மேல் குண்டம் கட்டுதல், மாலை, 6:30 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடித்தல், இரவு 10:30 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 24ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல் குண்டம் இறங்குதல், 25ம் தேதி காலை 9:00 மணிக்குள் கொடி இறக்குதல், காலை 10:30 மணிக்கு மேல் மஞ்சள் நீராடல், இரவு 8:00 மணிக்கு மகா முனி பூஜையும், 26ம் தேதி முற்பகல் 11:30 மணிக்கு மகா அபிேஷகம், அலங்கார பூஜையும் நடக்கிறது.
குண்டம் திருவிழா பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடுகள் செய்து தர போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டம் திருவிழா நடைபெறும் போது, தீயணைப்புத்துறையினர், தீயணைப்பு வாகனத்துடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும். விழா முடியும் வரை தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். தற்காலிக கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும். மயான பூஜை நடைபெறும் இடத்தினை உரிய நிர்வாகம் சுத்தம் செய்து தர வேண்டும். உரிய இடங்களில், மின்விளக்குகள் பொருத்தப்பட வேண்டும்.
குண்டம் திரவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளுக்காக முதலுதவி மையம் இரண்டும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் இரண்டும் ஏற்பாடு செய்து தர வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும். அனைத்து துறையும் இணைந்து போதுமான வசதிகள் மேம்படுத்தி விழா சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதில், போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெகநாதன், ஊர்காவல்படையினர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.