600 ஆண்டுகளுக்கு பிறகு பர்வதமலை கோவில் கும்பாபிஷேகம்!
திருவண்ணாமலை: தென் கயிலாயம் என்றழைக்கப்படும் பர்வதமலை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், 600 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது. திருவண்ணாமலை அருகே தென்மகாதேவமங்கலம் கிராமத்தில், 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில், 2000 ஆண்டு பழமை வாய்ந்த பிரம்மராம்பிகை உடனுறை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள லிங்கங்களுக்கு, பவுர்ணமி தோறும் பக்தர்களே சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்வர். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில், கடந்த, 600 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் கோவிலில் திருவிளக்கு வழிபாடு, வாஸ்து வழிபாடு, மண் எடுத்தல், முளையிடுதல், வேள்வி நிறைவு, எண் வகை மருந்து சாற்றுதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 6 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, மற்றும் வேள்வி நிறைவு பூஜை நடந்தது. காலை, 9.30 மணிக்கு, சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, கோபுரத்தின் உச்சியில் உள்ள கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபி?ஷகம் நடத்தப்பட்டது. அப்போது, பக்தர்கள் அரோகரா என்று கோஷம் எழுப்பி வழிபட்டனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி, அம்மனை வழிபட்டனர்.