கோவை கோனியம்மன் தேர்த்திருவிழா முகூர்த்த கால் நிகழ்ச்சி!
கோவை : கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று முகூர்த்த கால் நிகழ்ச்சியோடு துவங்கியது. கோவையின் காவல் தெய்வமாக விளங்கும், கோனியம்மனுக்கு, ஆண்டு தோறும், மாசி மாதத்தில், தேர்த்திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு, தேர்த்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக, முகூர்த்த கால் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோனியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, வன்னிமரத்தாலான, முகூர்த்தக் கால் அமைக்கப்பட்டு, அதற்கு மஞ்சள் பூசி, குங்கும திலகமிட்டு, மலர் மலை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து, வன்னி மரத்தாலான முகூர்த்த காலை, சிவாச்சாரியார்கள் புடை சூழ, பெரிய கடைவீதியில் இருந்து, ராஜவீதி தேர்நிலைத்திடலுக்கு எடுத்துச்சென்றனர். அங்கு தேரின் மேற்பகுதியில், அமைத்து, அங்கு சிறப்பு பூஜை செய்து, கோவில் நிர்வாகிகள் மற்றும் சிவாச்சாரியார்கள், வழிபாடு செய்தனர். கோவில் நிர்வாகிகள் கூறுகையில், தேர்த்திருவிழா பிப்., 16ல் துவங்குகிறது. தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி மார்ச் 2ல் நடக்கிறது என்றனர்.