புதுச்சேரியில் 25 கோவில்களில் கும்பாபிஷேகம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் வரதராஜபெருமாள், வில்லியனுார் திருக்காமீஸ்வரர், திருக்காஞ்சி கெங்காவராக நதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட 25 கோவில்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜபெருமாள் கோவிலில் ரூ. 4 கோடி செலவில் திருப் பணிகள் முடிந்து, 17 ஆண்டுகளுக்கு பிறகு சம்ப்ரோஷணம் நடந்தது. காலை 8:00 மணிக்கு விஸ்வரூபம், கோபூஜைகளும், சரியாக 9:00மணிக்கு கடம் புறப்பாடும், பெருமாள் மற்றும் கோவில் பிரகாரத்தில் அனைத்து சன்னதிகள், மூலவர் விமானம், ராஜ கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி சம்ப்ரோஷணம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், திருக்கோவிலுார் ஜீயர் சுவாமிகள், நடத்தி வைத்தனர். ராதாகிருஷ்ணன் எம்.பி., முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி, லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., அறநிலையத்துறை செயலர் சுந்தர வடிவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தி
திருக்காமீஸ்வரர் கோவில்: வில்லியனுாரில், 11ம் நுாற்றாண்டில் தர்மபால சோழனால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புடைய, கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் ரூ. 11.55 கோடியில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று காலை 4:00 மணிக்கு 10வது கால பூஜையும், 5:30 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சரியாக 9:20 மணிக்கு, கோவில் மூலவர் மற்றும் அனைத்து சன்னதிகளின் விமானங்களிலும், ராஜகோபுரத்திலம் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 1986ம்ஆண்டிற்கு பிறகு 29 ஆண்டுகளுக்கு பின் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது குறிப்பிடத்தக்கது. முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் சபாபதி, அமைச்சர் ராஜவேலு, காங்., தலைவர் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருக்காஞ்சி: கெங்காவராக நதீஸ்வரர் வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில், ஸ்ரீ காமாட்சி, ஸ்ரீ மீனாட்சி உடனுறை கெங்காவராக நதீஸ்வரர் கோவில் புதுப்பித்து,66 ஆண்டுகளுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. காலை 5:00மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, 9:30 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மயிலம் பொம்புர ஆதினம் சிவஞானபாலய சுவாமிகள் முன்னிலையில் சரவணன் சிவாச்சாரியார் தலைமையில் புனித நீர் ஊற்றினர். அமைச்சர் தியாகராஜன், எம்.எல்.ஏ.,க்கள் தேனீ ஜெயக்குமார், அங்காளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், மூலகுளம் ராதாகிருஷ்ணன் நகரில் உள்ள வலம்புரி செல்வ விநாயகர் கோவில் உள்ளிட்ட 25 கோவில்களுக்கு நேற்று ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடந்தது.