ஸ்ரீவி.,பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா: ஏராளமானோர் தீ மிதித்தனர்
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயிலில் நடந்த பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.
இக்கோயிலில் பூக்குழி திருவிழா மார்ச் 7 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் அம்பாள் மண்டபம் எழுந்தருளல், இரவு வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதலை முன்னிட்டு இன்று அதிகாலை பட்டத்தரசி அம்மன் கோயிலில் தீ வளர்க்கபட்டு பெரிய மாரியம்மன் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு அக்கினி குண்டத்தில் தீ வளர்க்கப்பட்டது. அதிகாலை முதல் காப்பு கட்டி பல்வேறு கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து ரதவீதி சுற்றி வந்து வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். மதியம் 1:35 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்குதலை, தக்கார் சக்கரையம்மாள், செயல் அலுவலர் ஜோதிலட்சுமி கொடியசைத்து துவக்கினர். பூஜாரி சுந்தர் முதலில் இறங்க, அவரைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றி அம்மனை வழிபட்டனர். விழாவில் தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். டி.எஸ்.பி.பாலசுந்தரம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இன்று மதியம் 12:30 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது.
குளிர்வித்த சாரல் மழை; நேற்று வரை நகரில் வெயிலின் தாக்கம் தாங்க முடியாத அளவிற்கு இருந்தது. பூக்குழி நாளான இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் இல்லாமல் மேகமூட்டத்துடன் இதமான தட்பவெப்ப சூழ்நிலை நிலவியது. சரியாக பூக்குழி இறங்கும் நேரத்தில் கருமேகம் சூழ்ந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டது. மதியம் 2:40 மணிக்கு மேல் சாரல் மழை பெய்தது.
பக்தர்கள் வேதனை: பல ஆயிரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்த நிலையில், பல்வேறு அரசுத் துறையை சேர்ந்தவர்களின் உறவினர்கள் வரிசையில் நிற்காமல், கோயில் அதிகாரிகளை பின்தொடர்ந்து வந்து நேரடியாக பூக்குழி இறங்கினர்.