திருத்தணி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
திருத்தணி : லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், திருத்தணி ம.பொ.சி. சாலையில் உள்ளது. இக்கோவிலில், நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழாவை ஓட்டி, கோவில் வளாகத்தில், ஐந்து யாகசாலைகள், 164 கலசங்கள் அமைத்து, நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது.நேற்று காலை, கோ பூஜை, மூர்த்தி ஹோமம், யாத்ராதானம், தசதானம் பூர்ணாஹூதி நடந்தது. காலை 10:15 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, கோவில் விமானத்தின் மீது, கலசநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது.அப்போது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என, முழக்கமிட்டனர். தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.இந்த விழாவில், அரக்கோணம் எம்.பி., அரி, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி, நகர்மன்ற தலைவர் சவுந்தர்ராஜன் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.