கற்பக ராஜ கணபதி கோவில் கும்பாபிஷேகம்
திருப்பூர் : கே.செட்டிபாளையம், டி.பி.என்., கார்டனில், ஸ்ரீகற்பக ராஜகணபதி, நீரூற்று விநாயகர், ஸ்ரீபாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவில், கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன், நேற்று முன்தினம், யாக சாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து, அண்ணாமலையார் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், முளைப்பாரி எடுத்தல், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று, அதிகாலை, 4:00க்கு, இரண்டாம் கால யாக பூஜை, தத்துவயம் யோஜனம் மற்றும் கலசங்கள் புறப்பாடு நடந்தது. 6:15க்கு, வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின், ஸ்ரீகற்பக ராஜகணபதி கும்பாபிஷேகம், தச தரிசனம், தச தானம் மற்றும் மகா தீபா ராதனை, அன்னதானம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கும்பாபிஷேகத்தை, ஸ்ரீஅண்ணாமலையார் கோவில் அர்ச்சகர்கள், சிவக்குமார குருக்கள், ஸ்ரீதர் குருக்கள் செய்தனர். செந்தமிழ்வேல், ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். ஏற்பாடுகளை, டி.பி.என்., கார்டன் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர். கற்பக விநாயகர் கோவில்: திருப்பூர் மங்கலம் ரோடு, கோழிப்பண்ணை, செந்தில் நகரில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகமும் நேற்று நடந்தது. 18 முதல், யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 7:00க்கு, நிறை வேள்வி, மகா தீபாராதனை, கலச புறப்பாடு நடந்தது. காலை, 9:00க்கு, பரிவார சுவாமிகள் கும்பாபிஷேகம், 10:00க்கு, கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம், மகா தீபாராதனை, தச தரிசனம், தச தானம் மற்றும் அன்னதானம் நடந்தது.