இருளில் மூழ்கும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை: அச்சத்தில் பக்தர்கள்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் மின் விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கியதால் பக்தர்கள் அச்சம் அடைகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடுகின்றனர். சுவாமி தரிசனம் செய்து விட்டு மாலையில் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் இதனருகே உள்ள நடைமேடையில் நடந்து செல்வது வழக்கம். இவர்களுடன் உள்ளூர் மக்களும் குழந்தைகளுடன் வாக்கிங் சென்று இரவு 8:00 மணி வரை பொழுது போக்குகின்றனர். இந்த நடைமேடை அருகே சில சிற்றுண்டி கடைகள் உள்ளதால் சாப்பிட்டு மகிழ்வர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடைமேடையில் உள்ள மின் விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கியுள்ளது. இதில் சில மின்விளக்குகள் பழுதாகியும், சில விளக்குகள் எரிந்தாலும் இதன் சுவிட்ச்சை ஆன் செய்ய நகராட்சி ஊழியர்கள் முன் வருவதில்லை. இதனால் இருள் சூழ்ந்துள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் சில சமயம் சமூக விரோதிகள் மது போதையில் ரகளை செய்து சமூக விரோத செயலில் ஈடுபடுகின்றனர். இதனால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். இதில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.