உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மகாகும்பாபிஷேகம்

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மகாகும்பாபிஷேகம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் 13 கோடி ரூபாயில் புனரமைப்பு பணிகள்முடிவடைந்து 21 ஆண்டுகளுக்குப்பின் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. பழமையான கோவில்:விளாத்திகுளத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் வைப்பாற்று கரையில் அமைந்துள்ளது. 500 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் 1996 ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதற்கு பின் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் நடக்கவில்லை. கோயில் பழமையான நிலையில் இருந்தது. புனரமைப்பு பணி:இப்பகுதியை சேர்ந்தவர்கள் முயற்சியுடன் மீனாட்சி சுந்தேரஸ்வரர் டிரஸ்ட் அமைக்கப்பட்டது.

கோயில் புனரமைப்பு பணிக்கு இந்து சமய அறநிலையத்துறையிடம் அனுமதி பெற்றனர். அதன் படி 2012 அக்., மாதம் சுவாமி, அம்பாள், பரிவார தேவதைகளுக்கு பாலாலயம் செய்யப்பட்டு 13 கோடி ரூபாயில் புனரமைப்பு பணிகள் துவக்கப்பட்டன. இதில் அனைத்தும் கற்சிற்பங்களால் அமைக்கப்பட்டது. இதில் சுவாமி சன்னிதி முன்பாக 5 நிலைகள் கொண்ட 70 அடி ராஜகோபுரமும், அம்பாள் சன்னிதி முன்பு 3 நிலைகளில் 50 அடி உயரம் கொண்ட தெற்கு ராஜகோபுரம் அமைக்கப்பட்டது.கன்னிமூல கணபதி,முருகன், வள்ளி, தெய்வாணை,பெருமாள்,லட்சுமி,ஐயப்பன்,சரஸ்வதி, சனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி,காலபைரவர், நவக்கிரகங்கள்,துர்க்கை உள்ளிட்ட 14 உப சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மகாகும்பாபிஷேகம்: ஜன., 17 ல் விக்னேஷ்வர பூஜையுடன் விழா துவங்கியது. ஜன.,18ல் மகா கணபதி ஹோமம்,நவக்கிரக பூஜை, கோ பூஜை,கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் நடந்தது. ஜன., 19ல் இரண்டாம் கால யாகவேள்வியும்,மாலை மூன்றாம் கால யாக வேள்வியும் நடந்தது.நேற்று காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. பூர்ணஹூதியும், காலை 8 மணிக்கு கும்பங்கள் புறப்பட்டது. 9 மணிக்கு மேல் விமானங்களுக்கும், ராஜகோபுரங்களுக்கும் மகாகும்பாபிஷேகம் நடந்தது.10.30 மணிக்கு மூலவர் ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வரர், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடந்தது. மாலை 6.30 மணிக்கு மீனாட்சி அம்பாளுக்கும், சுந்தரேஸ்வரர் பெருமானுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. பஞ்ச மூர்த்திகளின் திருவீதியுலாவும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !