இடைப்பாடி பகுதி கோவிலில் திருவிழா: தீ மிதித்த பக்தர்கள்
இடைப்பாடி: இடைப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. அதையொட்டி நடந்த குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்தனர். இடைப்பாடி அருகே உள்ள மேட்டுத்தெரு, க.புதூர், ஆலச்சம்பாளையம் பகுதிகளில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் திருவிழா, பூச்சாட்டுதலுடன் துவங்கி, கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. மேட்டுத்தெரு மாரியம்மன், க.புதூர் காளியம்மன் ஸ்வாமிகளின் திருக்கல்யாணம், கடந்த புதன்கிழமை நள்ளிரவு நடந்தது. நேற்று காலை நடந்த தீமிதி திருவிழாவில், ஸ்ரீபருவராஜகுல உறவினர் முறையாரின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள மேட்டுத்தெரு மாரியம்மன் கோவிலில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், க.புதூர் காளியம்மன் கோவிலில், இரண்டாயிரத்தும் மேற்பட்ட பக்தர்களும் தீ மிதித்தனர். தீமிதி விழாவில், ஆகாய விமான அலகு, ஆம்னி வேன் போன்றவைகளை இழுத்து வந்தும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏராளமான பெண்கள், தங்கள் குழந்தைகளுடனும் தீ மிதித்தனர். மேட்டு மாரியம்மன் ஸ்வாமிக்கு, ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாலும், ஆயிரத்து ஒன்று ரூபாய் காயின்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.