பார்த்தசாரதி கோவில் திருவூறல் உற்சவம் நடைமுறை மாற்றத்தை எதிர்த்து வழக்கு!
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில், ஈக்காட்டுத்தாங்கல் திருவூறல் உற்சவம் தொடர்பாக, பதிலளிக்கும்படி, அறநிலையத் துறைக்கு, நோட்டீஸ் அனுப்ப, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரும் மாற்றம் சென்னை, மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் தேவஸ்தான தலைவர், ஸ்ரீதர் தாக்கல் செய்த மனு:
ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் கோவில், வைணவ ஆழ்வார்களில் ஒருவரான, பேயாழ்வார் பிறந்த தலமாக கருதப்படுகிறது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி, ஈக்காட்டுத்தாங்கல் திருவூறல் உற்சவத்தின் போது, மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார், பார்த்தசாரதி சுவாமியை எதிர்கொண்டு, மங்களாசாசனம் செய்வார். பல நுாற்றாண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
மயிலாப்பூரில் உள்ள மாதவ பெருமாள் கோவில் சார்பாகவும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு, மங்களாசாசனம் செய்ய அனுமதி கோரப்பட்டது. இதற்கு எங்கள் கோவில் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மாதவ பெருமாள் கோவில் சார்பில், மண்டகப்படி மட்டும் செய்ய அனுமதித்து, அறநிலையத் துறை, 2008 பிப்ரவரி, 28ல் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து மாதவ பெருமாள் கோவில் சார்பில் தொடரப்பட்ட வழக்கு, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், ஜன., 24ல் ஈக்காட்டுத்தாங்கல் விழா நடைபெற உள்ளது. இது தொடர்பாக, பார்த்தசாரதி சுவாமி கோவில் செயல் அலுவலர், 2015, டிச., 30ல் கடிதம் அனுப்பினார். அதில், ஈக்காட்டுத் தாங்கல் விழாவின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பெருமளவில் மாற்றப்பட்டுள்ளன. இதை எதிர்த்து, அறநிலையத் துறைக்கு மனு அனுப்பினோம். ஆனால் எந்த பதிலும் இல்லை. எனவே, 2015 டிச., 30ல் பார்த்தசாரதி சுவாமி கோவில் செயல் அலுவலர் அனுப்பிய உத்தரவை ரத்து செய்து, 2008 உத்தரவின்படி, ஈகாட்டுத்தாங்கல் திருவூறல் உற்சவத்தை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
அரசுக்கு நோட்டீஸ்: இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், மனுவுக்கு பதிலளிக்கும்படி அறநிலையத் துறைக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். சிறப்பு அரசு பிளீடர் சஞ்சய் காந்தி, அறநிலையத் துறை சார்பில், நோட்டீஸ் பெற்றுக் கொண்டார். வழக்கு, ஜன., 27க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.