மோசடி செய்தால் என்னாகும்?
இன்று எங்கும் எதிலும் மோசடி என்ற நிலை உருவாகி விட்டது. அவ்வாறு மோசடி செய்தால் என்னாகும் என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்கு எச்சரிக்கை விடுக்கிறார்கள். ரமலான் நோன்பு என்பது நற்பழக்கங்களைக் கைக்கொள்வதற்கான பயிற்சியே ஆகும். இந்த நல்ல நேரத்தில் மோசடி செய்யக்கூடாது என்பதற்காக அவர்கள் தரும் அரிய கருத்துக்களைக் கேளுங்கள்.
அல்லாஹ் ஒருவனை அழித்துவிட வேண்டும் என்று நாடினால் மோசடிகளின் வாசல்களை அவனுக்கு திறந்துவிடுவான். ஒரு முஃமினுக்கு கெடுதல் செய்து அல்லது மோசடி செய்த ஒருவன் சாபத்திற்குரியவனாவான். ஒருவன் மோசடி செய்து சம்பாதித்து மகிழ்ச்சியுடன் இருக்கும்பொழுது, அவனுக்கு அல்லாஹ் திடீரென்று வேதனையைக் கொடுத்து பிடித்துக் கொள்வான். எந்த தலைவன் பொது மக்களுக்கு சேவை செய்யாமல் மோசடி செய்கிறானோ அவன் சுவர்க்கம் நுழையமாட்டான். உமது உற்ற தோழரிடம் பொய்யை உண்மை என்று கூறுவது மாபெரும் மோசடியாகும்.
நம்பிக்கையுடன் உன்னிடம் (ஒருவன்) கொடுத்த பொருளை உரியவரிடம் கொடுத்துவிடு, உன்னிடம் ஒருவன் மோசடி செய்தாலும், அவனிடம் நீ மோசடி செய்யாதே. மோசடி செய்து எடுத்த பொருளை ஒருவன் அவனது கியாம நாளில் கொண்டு வர வேண்டும். இவற்றையெல்லாம் மனதில் கொண்டு மோசடி என்னும் சொல்லையே மறந்து விட முயற்சிக்க வேண்டும்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.44 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.32 மணி.