இருக்கன்குடியில் ஆடிவிழா: பக்தர்கள் தரிசனம்
சாத்தூர் : இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடிவிழாவில் நடந்த பவனியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி பெருந்திருவிழா, ஆக., 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரை, வேன்கள், பஸ்கள், லாரிகள் மூலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு, ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில், அம்மன் எழுந்தருள, பவனி நடந்தது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் எஸ்.ஆர்.எம். ராமமூர்த்தி பூசாரி மற்றும் உதவி ஆணையர் மாரிமுத்து செய்திருந்தனர். சாத்தூர் டி.எஸ்.பி., சின்னையா தலைமையில், 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.