மூலஸ்தானத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் அடுத்த, விளந்தை பெரியாயி கோவில் மூலஸ்தானத்தில், நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த, விளந்தை மணல்மேட்டில் பெரியாயி கோவில் உள்ளது. நேற்று, இதே ஊரில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள, வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். பெரியாயி கோவில் பூசாரி, பூஜை செய்வதற்காக மாலை 6 மணிக்கு, கோவிலைத் திறந்து மூலஸ்தானத்திற்குச் சென்றார்.அங்கு நல்லபாம்பு ஒன்று, சுவாமி சிலை அருகே படுத்துக் கொண்டிருந்தது. இத்தகவல் பரவியதால், திருவிழாவிற்கு வந்திருந்த பொதுமக்கள், நூற்றுக்கணக்கானோர் பெரியாயி கோவிலில் திரண்டனர்.எந்தச் சலசலப்புக்கும் அசையாமல், அந்தப் பாம்பு அமைதியாக மூலையில், வாலைச் சுருட்டி படுத்துக் கொண்டது. பூசாரி வழக்கம்போல், பூஜை செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பக்தர்களின் கூட்டம், பாம்பைப் பார்ப்பதற்காக, கோவில் வளாகத்தில் அலைமோதியது.இந்தச் சம்பவம், விளந்தை கிராமத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.