உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொங்கல் வைத்து வழிபாடு காவிரிக்கு நன்றி தெரிவிப்பு

பொங்கல் வைத்து வழிபாடு காவிரிக்கு நன்றி தெரிவிப்பு

கும்பகோணம்: கும்பகோணத்தில் "சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் 66வது ஆண்டாக நடந்த காவிரிப் பொங்கல் விழாவில், காவிரித்தாய்க்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மண்வளத்தைச் செழிக்கச்செய்து மனித குலத்தைத் தழைக்கச் செய்யும் தமிழக மக்களின் கண்கண்ட இயற்கைத் தெய்வமாகத் திகழும் காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 66வது ஆண்டு காவிரிப் பொங்கல் விழா கும்பகோணம் ராஜராஜேந்திரன்பேட்டை காவிரிப் படித்துறையில் நேற்று முன் தினம் மாலை நடந்தது.விழாவை, தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். காவிரி அன்னைக்குச் சிறப்பு அர்ச்சனையை கும்பகோணம் ஆர்.டி.ஓ., வெங்கடேசன் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கும்பகோணம் டி.எஸ்.பி. சிவபாஸ்கர் கூட்டுவழிபாட்டைத் தொடங்கி வைத்தார். ஆயுர்வேத டாக்டர் விஜயஸ்ரீ காவிரியைப் பற்றி கவிதை வடிவில் போற்றினார்.இதைத் தொடர்ந்து காவிரி அன்னைக்குச் சிறப்பு அர்ச்சனை மற்றும் பால் உள்ளிட்ட அபிஷேக திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, காவிரி நதியில் தீபங்கள் ஏற்றி விடப்பட்டன. விழாவில் ஆவணியாபுரம் கிரசண்ட் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் செல்வசேகரன், "சேம்பர் ஆப் காமர்ஸ் துணைத்தலைவர் ராஜமகேந்திரன், பொருளாளர் செல்வராஜ், உறுப்பினர்கள் குமார், விஸ்வலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் சண்முகம் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !