கும்பகோணம் மகாமகம் திருவிழாவில் மீனாட்சி அம்மன் கோயில் குங்குமம்
மதுரை: கும்பகோணம் மகாமகம் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு வழங்குவதற்காக, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தலா 5 லட்சம் பாக்கெட் ஸ்பெஷல் கஸ்துாரி குங்குமம் தயாரிக்கும் பணி துரிதமாக நடக்கிறது.
கும்பகோணம் ஸ்ரீசுதர்சனவல்லி ஸ்ரீவிஜயவல்லி தாயார் ஸ்ரீசக்கரபாணி சுவாமி கோயிலில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் திருவிழா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி உற்சவம் பிப்.,22ல் நடக்கிறது. இதில் பத்து லட்சம் பக்தர்களுக்கு குங்கும பிரசாதம் வழங்க, அறநிலைய துறை உத்தரவுப்படி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தலா 5 லட்சம் ஸ்பெஷல் கஸ்துாரி குங்குமம் தயாரிக்கும் பணி துரிதமாக நடக்கிறது. மூன்று கிராம் எடையில் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பாக்கெட்கள் தயாரிக்கப்படுகின்றன.
கஸ்துாரி மஞ்சளுக்கு புகழ்பெற்ற ஈரோடு மாவட்டத்தில் இருந்து தரமான மஞ்சள் கிழங்குகள் வரவழைக்கப்பட்டு, ரசாயன பொருட்களை தவிர்த்து, நல்லெண்ணெய் கலவையில் தயாரிக்கப்படுகிறது. மகாமகம் விழாவிற்கு பின் கோயில்களின் தேவைக்காக தொடர்ந்து குங்குமம் தயாரிக்கப்படவுள்ளது. 3 கிராம், 5 கிராம், 10 கிராம், 40 கிராம் அளவுகளில் குங்குமம் பாக்கெட் வடிவில் விற்கப்படவுள்ளது.