உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரூ.2 கோடி மதிப்புள்ள கோவில் இடம்... மீண்டும் ஆக்கிரமிப்பு!

ரூ.2 கோடி மதிப்புள்ள கோவில் இடம்... மீண்டும் ஆக்கிரமிப்பு!

பல்லடம் : பல்லடம் பொங்காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம், அறநிலையத்துறை அதிகாரிகளின் கவனக்குறைவால், மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது, பக்தர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் நகராட்சி பகுதியில், அறநிலையத்துறைக்கு சொந்தமான, பொங்காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலை சுற்றி, 55 சென்ட் காலி இடம் உள்ளது. இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை, கடந்த சில ஆண்டுகளாக, தனியார் ஒருவர் ஆக்கிரமித்தார். இதுதொடர்பாக, அப் பகுதியினர் புகார் காரணமாக, 2015 செப்., மாதம், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அறநிலையத்துறை சார்பில், எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ஆனால், அந்த இடம், தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அருகிலுள்ள, சிலர், அப்பகுதியை, "பார்க்கிங் இடமாக பயன்படுத்துகின்றனர். கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை அங்கு நிறுத்துவோர், புகை பிடிப்பது, சிறுநீர் கழிப்பது, சில நேரங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர்.

தனியார் பிடியில் மீண்டும் சிக்கியுள்ள, கோவில் இடத்தை மீட்க, அறநிலையத்துறை அதிகாரிகள், அக்கறை காட்டுவதில்லை என, பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். பிரச்னைக்கு தீர்வாக, இடத்தை சுற்றி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும், உரிய இடைவேளையில் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும், அந்த இடத்தில் நந்தவனம் அமைத்து பராமரிக்க வேண்டும், என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பகுதியினர் கூறுகையில், "கோவிலுக்கு சொந்தமான இடத்தை அவ்வப்போது ஆக்கிரமிப்பதும், அதை அகற்றுவதும் வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே உள்ளது. வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையும் அழிக்கப்பட்டுள்ளது. கோவில் இடத்தை மீட்டு, அதை நிரந்தரமாக பாதுகாக்க, அறநிலையத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும், என்றனர். கோவில் செயல் அலுவலர் சிவாராமசூரியனிடம் கேட்டபோது, "" இடத்தை சுற்றிலும் வேலி அமைக்க, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்யப்பட்டு, உயரதிகாரி ஒப்புதலுக்கு, அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், வேலி அமைக்கப்படும். அறிவிப்பு பலகை யை சேதப்படுத்தியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !