லட்சுமியம்மன் கோவிலில் 10ம் தேதி கும்பாபிஷேகம்
ஊத்துக்கோட்டை: கொள்ளாபுரி லட்சுமியம்மன் கோவிலில், வரும், 10ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.பிளேஸ்பாளையம் கிராமத்தில் உள்ள, கொள்ளாபுரி லட்சுமியம்மன் கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. பகுதிவாசிகள் பங்களிப்புடன், கோவிலை சீரமைக்கும் பணி துவங்கியது.பணிகள் முடிந்ததையடுத்து, வரும், 10ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, 8ம் தேதி, திங்கட்கிழமை காலை, 10:00 மணிக்கு கணபதி பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. வரும், 10ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து, காலை, 9:30 மணிக்கு, கொள்ளாபுரி லட்சுமியம்மன், கணபதி, நவக்கிரக மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். காலை, 10:00 மணிக்கு, மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற உள்ளன.