உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டையூர் மாரியம்மன் கோவிலில் சமுதாய ஒற்றுமையை வலியுறுத்தும் பொங்கல்

கோட்டையூர் மாரியம்மன் கோவிலில் சமுதாய ஒற்றுமையை வலியுறுத்தும் பொங்கல்

மேட்டூர் : கொளத்தூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் பண்டிகை இன்று நடக்கிறது. பண்டிகையை முன்னிட்டு சமுதாய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பொங்கலிடும் நிகழ்ச்சி நடக்கிறது. கொளத்தூர் ஒன்றியம் கோட்டையூரில் உள்ளது பிரசித்த பெற்ற பழமையான மாரியம்மன் கோவில். இந்த கோவில் பண்டிகைக்கு, சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் வருகை தருவர். சந்தன கடத்தல் வீரப்பன் தன் இஷ்ட தெய்வாக கோட்டையூர் மாரியம்மனை வணங்குவது வழக்கம்.அதனால், வீரப்பன் தேடுதல் வேட்டை நடந்த காலத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் பண்டிகைக்கு வீரப்பன் வரக்கூடும் என்பதால், பண்டிகை சமயங்களில் வீரப்பனை பிடிக்க போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது உண்டு. வீரப்பனை சுட்டு கொன்ற பின்னர், ஆறு ஆண்டுகளாக பண்டிகையின் போது போலீஸ் பாதுகாப்பு மட்டுமே போடப்படுகிறது. கோட்டையூர் மாரியம்மன் பண்டிகையை முன்னிட்டு நேற்று காலை ஏராளமான பக்தர்கள் காவிரியாற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். இன்று மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், சமுதாய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் முதலில் பொங்கல் வைத்து, கிடா வெட்டி நிகழ்ச்சியை துவங்கி வைத்த பின்பே, அந்த பகுதியை சேர்ந்த மெஜாரிட்டி சமுதாயத்தினர் கிடா வெட்டி பொங்கல் வைக்கின்றனர். கோட்டையூர், காவேரிபுரம், சத்யாநகர், கோவிந்தபாடி, கருங்கல்லூர், கத்திரிபட்டி, தெலுங்கனூர், செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இன்று கோவிலில் கிடா வெட்டி நேர்த்தி கடன் செலுத்தி, தங்கள் உறவினர்களையும் அழைத்து விருந்து கொடுப்பார்கள். அதனால், இரு நாட்களாக கொளத்தூர் பகுதியில் ஆடு, கோழிகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. கோட்டையூர் மாரியம்மன் பண்டிகையை முன்னிட்டு மேட்டூர், கொளத்தூர், கோவிந்தபாடி பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !