உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை விழா

திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை விழா

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும், மாசி பிரம்மோற்சவம் மற்றும் நேற்று நடந்த கிருத்திகை விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

திருத்தணி முருகன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவம், கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாளான நேற்று, காலை 9:30 மணிக்கு, மலைக்கோவிலில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:30 மணிக்கு, ஆட்டுக் கிடாய் வாகனத்தில் உற்சவர் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.

நேற்று, மாசி மாத கிருத்திகையையொட்டி, அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன.

இந்த விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவரை வழிபட்டனர். இன்று நடக்கும் நான்காம் நாள் பிரம்மோற்சவ விழாவில், காலை 9:30 மணிக்கு, பல்லக்கு சேவை, இரவு 7:30 மணிக்கு, வெள்ளி நாக வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !