உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமீயச்சூர் மேகநாத சுவாமி கோவில் தேரோட்டம்

திருமீயச்சூர் மேகநாத சுவாமி கோவில் தேரோட்டம்

திருவாரூர்: பேரளம் அருகே, திருமீயச்சூர் லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி கோவில் தேரோட்டம், நேற்று நடந்தது. திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே, திருமீயச்சூர் கிராமத்தில், லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், வேளாக்குறிச்சி ஆதினம் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலின் பிரம்மோற்சவ விழா, கடந்த 4ம் தேதி, விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்கியது. மறுநாள் கொடியேற்றம் நடந்தது. இதை தொடர்ந்து, தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்து வந்தது. கடந்த 10ம் தேதி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.லலிதாம்பிகை மேகநாத சுவாமி, நேற்று முன்தினம் இரவு, தேருக்கு எழுந்தருளினார். பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவான தேரோட்டம், நேற்று நடந்தது. நேற்று காலை 6:15 மணிக்கு, தேரோட்டத்தை, ஸ்ரீலஸ்ரீ சத்தியஞானமகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வடம்பிடித்து துவக்கி வைத்தார். பின், பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர். தேர் நிலையில் இருந்து, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக வலம் வந்து, மாலையில் நிலையை வந்தடைந்தது. கடந்த, 1969ம் ஆண்டிற்கு பின், தற்போது, தேரோட்டம் நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. பத்தாம் நாள் விழாவாக, இன்று காலை நடராஜர் வீதிவலம் வந்து தீர்த்தம் கொடுத்தருளுதல், மதியம், பஞ்சமூர்த்திகள் சூரிய புஷ்கரணியில் தீர்த்தம் கொடுத்தருளுதல் நடைபெற உள்ளன. நாளை, சண்டிகேஸ்வரர் உற்சவமும், நாளை மறுநாள், உற்சவ பிராயச்சித்த அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !