திருப்பதியில் வருடாந்திர தெப்போற்சவம் நிறைவு
திருப்பதி: திருப்பதியில் நடந்து வந்த வருடாந்திர தெப்போற்சவம் நிறைவு பெற்றது. திருப்பதி ரயில் நிலையம் அருகில், கோவிந்தராஜ சுவாமி கோவிலை அடுத்துள்ள திருக்குளத்தில், பிப்., 16 முதல், வருடாந்திர தெப்போற்சவம் நடந்து வந்தது. இறுதி நாளான, பிப்.,22 மாலை, கோவிந்தராஜ சுவாமி, உபய நாச்சியார்களுடன், தெப்பத்தில் எழுந்தருளி, திருக்குளத்தில் வலம் வந்தார்.
படி உற்சவம்: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின், இந்து தர்ம பிரசார பரிக்ஷித் சார்பில், ஆண்டுதோறும், நான்கு முறை படி உற்சவம் நடத்தப்படும். மாசி மாத பவுர்ணமியை ஒட்டி, நேற்று அதிகாலை, திருப்பதியில் உள்ள கோதண்டராம சுவாமி கோவிலில் இருந்து, 2,000 பக்தர்கள், பஜனை பாடல்கள் பாடியபடி, அலிபிரி பாதயாத்திரை மார்க்கத்தை அடைந்தனர். அங்கிருந்து, படிகளுக்கு, மஞ்சள், குங்குமம் வைத்து, பஜனை பாடல்கள் பாடியபடி, திருமலையை அடைந்து, ஏழுமலையானை தரிசித்தனர்.