காஞ்சி அமரேஸ்வரர் கோவில் மாசிமக மண்டகப்படி திருவிழா
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அமரேஸ்வரர் கோவில் மாசி மக மண்டகப்படி திருவிழா, பிப்.,22 கோலகலமாக நடைபெற்றது.
பெரிய காஞ்சிபுரம் ஒத்தவாடை தெருவில் அமைந்துள்ள அமரேஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும் மாசிமக மண்டகப்படி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்பாள் இந்த கோவில் எழுந்தளும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி, பிப்.,22 காலை, 9:00 மணியளவில், ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்து புறப்பட்டு, நான்கு ராஜ வீதிகள் வலம் வந்து, நிமந்தகாரத் தெரு, ஒத்தவாடை தெரு வழியாக மதியம், 1:00 மணிக்கு அமரேஸ்வரர் கோவிலை சென்றடைந்தார். மாலை, 5:00 மணியளவில் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு, 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை முடிந்து, 9:00 மணிக்கு இந்த கோவிலில் இருந்து புறப்பட்டு, இரவு, 11:00 மணிக்கு இருப்பிடம் சென்றடைந்தார்.