உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் ஆயிரம்கால் மண்டபம் கட்ட டெண்டர் வெளியீடு

திருமலையில் ஆயிரம்கால் மண்டபம் கட்ட டெண்டர் வெளியீடு

திருப்பதி: திருமலையில், ஆயிரம்கால் மண்டபம் கட்ட, டெண்டர் கோரப்பட்டுள்ளது. திருமலை, ஏழுமலையான் கோவில் எதிரில், விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் காலத்தில், 16ம் நுாற்றாண்டில், ஆயிரம்கால் மண்டபம் கட்டப்பட்டது.

இதை, 2013ல், திருமலையின் வளர்ச்சி பணிகளின் திட்டத்தின் கீழ், திருமலை திருப்பதி தேவஸ்தானம் அகற்றியது. அதில் இருந்த துாண்கள், பாபவிநாசம் செல்லும் மார்க்கத்தில் பாதுகாக்கபட்டு வருகின்றன. இதை எதிர்த்து சிலர், ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதற்கு உயர் நீதிமன்றம், திருமலையில், மீண்டும் ஆயிரம்கால் மண்டபம் ஏற்படுத்த வேண்டும் என, தேவஸ்தானத்திற்கு உத்தரவிட்டது.அதன்படி, திருமலையில் உள்ள நாராயணகிரி வனத்தில், 18 கோடி ரூபாய் செலவில், ஆயிரம்கால் மண்டபம் கட்ட, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கான வரைபடத்தை, தேவஸ்தானம் தயார் செய்துள்ளது. மண்டபத்தை கட்ட, கைதேர்ந்த சிற்ப கலைஞர்களை, தேவஸ்தானம் வரவேற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரி, ஆங்கில நாளிதழ்களில், விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. விருப்பமுள்ள சிற்ப கலைஞர்கள், மார்ச் 1ம் தேதிக்குள், தங்கள் விண்ணப்பங்களை தேவஸ்தானத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு, www.tirumala.org என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !