உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஊழியர்கள் 19 பேர் நிரந்தரம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஊழியர்கள் 19 பேர் நிரந்தரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், 19 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பவுர்ணமி தினத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர, 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேவை உள்ளது. தற்போது, 50க்கும் குறைவான நிரந்தர பணியாளர்களே உள்ளனர். ஆட்கள் பற்றாக்குறையை போக்க, தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில், 55 பேர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பணி நிரந்தரம் செய்ய தகுதியானவர்களின் பட்டியலை தயார் செய்ய, அரசு உத்தரவிட்டது, அதன்படி, 48 பேர் தகுதியானவர்கள் என, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில்களில் இருந்து பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது.

அண்ணாமலையார் கோவிலில் பட்டியலில் தேர்வு பெற்ற, 48 பேரும் பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணை கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது, 19 பேருக்கு மட்டுமே பணி நிரந்தர உத்தரவு வந்திருப்பது அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும், கோவிலில் பூஜை செய்ய அரசால் நியமனம் செய்யப்பட்டு, சம்பளம் பெறும் பட்டியலில், ஐந்து சிவாச்சாரியார்கள் மட்டுமே உள்ளனர். பரம்பரை அர்ச்சகர் என்ற பேரில், 300க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் அங்கு பூஜை செய்து வருகின்றனர். இதனால், இவர்களில் தகுதி உள்ளவர்களை தேர்ந்தெடுத்து, கூடுதலாக சிவாச்சாரியர்களையும் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !