உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கப்பூரில் ரூ.4 கோடிக்கு விற்ற உமா பரமேஸ்வரி சிலை மீட்பு!

சிங்கப்பூரில் ரூ.4 கோடிக்கு விற்ற உமா பரமேஸ்வரி சிலை மீட்பு!

சென்னை: தமிழகத்தில் இருந்து கடத்தி செல்லப்பட்டு, சிங்கப்பூர் அருங்காட்சியகத்திற்கு, நான்கு கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட உமாபரமேஸ்வரி பஞ்சலோக சுவாமி சிலையை போலீசார் மீட்டுள்ளனர்.

அரியலுார் மாவட்டம், ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள, பிரகதீஸ்வரர் கோவிலில் இருந்து, பிற்கால சோழர் காலத்தை சேர்ந்த, தேவி என்ற உமா பரமேஸ்வரி உள்பட எட்டு பஞ்சலோக சுவாமி சிலைகளை, அமெரிக்காவில் வசித்து வந்த, இந்திய வம்சாவளியை சேர்ந்த, சுபாஷ் கபூர் கடத்தி பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து இருந்தான். சில ஆண்டுகளுக்கு முன், அவனை, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சர்வதேச போலீசார் உதவியுடன் ஜெர்மனியில் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். ஜாமின் கிடைக்காமல், தற்போதும் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறான்.

அவன் கைது செய்யப்பட்டபோது, உமா பரமேஸ்வரி பஞ்சலோக சிலையை, சிங்கப்பூர் அருங்காட்சியத்திற்கு, அமெரிக்க டாலர் மதிப்புபடி, நான்கு கோடி ரூபாய்க்கு சுபாஷ் கபூர் விற்பனை செய்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், உமாபரமேஸ்வரியின் சிலை, ஸ்ரீபுரந்தான், பிரகதீஸ்வரர் கோவிலில் திருடப்பட்டது தான் என்பதற்கான சட்டப்பூர்வ ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் மூலம் நிரூபித்து, தமிழக அரசு மூலம், சிங்கப்பூர் அரசுக்கு அனுப்பி வைத்தனர். தமிழக அரசின் உரிமையை ஏற்று, சிங்கப்பூர் ஏசியன் சிவிலிஷேசன்ஸ் அருங்காட்சியக அதிகாரிகள், அந்நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த, பிரதமர் மோடியிடம்  ஒப்படைத்தனர். இதையடுத்து, உமாபரமேஸ்வரியின் சிலை டில்லிக்கு கொண்டு வரப்பட்டது. அந்த சிலையை, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்,  தமிழகத்திற்கு எடுத்து வந்து, கும்பகோணம் நீதிமன்றத்தில், கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் முன் காட்டினர். பின், அங்குள்ள நாகேஸ்வர சுவாமி கோவில், ஐகான் மையத்தில், நீதிமன்ற பாதுகாப்பில் வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !