உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக பணி தீவிரம்!

வீரபாண்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக பணி தீவிரம்!

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே, 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த எண்.4 வீரபாண்டி மாரியம்மன் கோவில் திருக்குட நீராட்டு பெருவிழா பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

பெரியநாயக்கன்பாளையம் அருகே எண்.4 வீரபாண்டியில் பழமையான, புகழ் பெற்ற வீரபாண்டி மாரியம்மன் கோவில் உள்ளது.  கண்நோய், வெப்பநோய் கண்டவர்கள் இக்கோவில் மாரியம்மனை வணங்கினால், நோய் நீங்கி, குணம் பெறுவார்கள் என்பது ஐதீகம். கூரை வேயப்பட்ட கட்டடத்தில் இருந்த இக்கோவிலுக்கு புதிய கருவறை மற்றும் முன் மண்டபம் எழுப்பி, 2000ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, கோவில் முன் புதியதாக வசந்த மண்டபம், குறிஞ்சி மண்டபம் எழுப்பப்பட்டுள்ளன. இது தவிர, கோவில் கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபம், விமானம், மாகாளியம்மன் விமானம், சுற்றுத் தெய்வக்கோவில்கள், தோரணவாயில் திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பரந்துபட்டுள்ள அருளாற்றலை வேள்விக்குண்டத்தில் இறக்கி, பின், புனிதநீர் உள்ள திருக்குடத்தில் செலுத்தியபின், தெய்வத் திருமேனியில் முழுக்காட்டலே திருக்குட நீராட்டு விழா எனப்படுகிறது. இம்மாதம், 7ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் விழா துவங்குகிறது. மார்ச், 11- காலை, 9:00 மணியிலிருந்து, 10:30 மணிக்குள் திருக்குட நீராட்டு விழா நடக்கிறது. விழாவையொட்டி, புதியதாக வேள்விச்சாலைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. விழாவில், ராசு அடிகள், குமரகுருபர சுவாமி, மருதாசல அடிகள், முத்துசிவராமசாமி சுவாமி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை தக்கார், செயல் அலுவலர், திருப்பணி உபயதாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !