மாணவர்களே.. உங்களுக்காக ஹயக்ரீவரிடம் பிரார்த்தித்தோம்!
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு சிறப்பு சக்தி உண்டு என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. காஞ்சிபுரம் மாவட்டம், செட்டிபுண்ணியம் தேவநாத பெருமாள் கோவிலில், யோக நிலையில் உள்ள ஹயக்ரீவர், தேர்வு பயம் நீக்கும் தெய்வமாக போற்றப்படுகிறார்.
இவரை வணங்கி தேர்வுக்கு சென்றால் நல்ல பலன் கிடைக்கிறது என்பதால், 10 மற்றும், 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் அல்லது மாணவர்களின் பெற்றோர் இக்கோவிலுக்கு அதிக அளவில் வருகை தந்து பிரார்த்தனை செய்கின்றனர். இங்கு வர இயலாத மாணவர்களுக்காக, அவர்களின் சார்பில், தினமலர் ஆன்மிக மலர் சிறப்பு பிரார்த்தனை செய்ய, அவர்களது விண்ணப்பத்தை தினமலர் கூப்பன் மூலம் அனுப்ப கேட்டு இருந்தோம். ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூப்பன்கள் அனுப்பியிருந்தனர். அனைத்து கூப்பன்களையும், நேற்று ஹயக்ரீவர் சன்னிதிக்கு கொண்டு சென்று அவர் முன்வைத்து சிறப்பு பூஜை செய்தோம். கோவில் நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளை நன்கு செய்து கொடுத்தது. மாணவர்களே, உங்கள் கூப்பனை ஹயக்ரீவரிடம் சமர்ப்பித்து விட்டோம்; இனி, நீங்கள் ஹயக்ரீவர் துணையுடன் தேர்வுகளை பயமின்றி சந்தித்து சிறப்பு மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறோம்! - ஆசிரியர்