உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதையுண்ட கோவிலில் தீவிர கண்காணிப்பு

புதையுண்ட கோவிலில் தீவிர கண்காணிப்பு

உடுமலை : "கல்லாபுரத்தில் புதையுண்டிருக்கும் கோவிலில் தொல்பொருள் துறையினர் ஆய்வு மேற்கொள்ளும் வரை கண்காணிப்பு பணிகள் தொடரும் என, வருவாய்துறையினர் தெரிவித்துள்ளனர். உடுமலை அருகேயுள்ள கல்லாபுரம் வேல் நகரை சேர்ந்த விவசாயி சிவக்குமார். இவரது விளைநிலத்தில் நேற்றுமுன்தினம் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டபோது புதையுண்டிருந்த பழமையான கோவில் தென்பட்டது. கல்வெட்டு மற்றும் பழமையான சிலைகள் இப்பகுதியிலிருந்து கிடைத்த நிலையில், ஆர்.டி.ஓ., ஜெயமணி தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். பழமையான கோவில் தென்படுவது குறித்து தகவல் கிடைத்துள்ளதால், சுற்றுப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர். பழமையான கோவிலாக இருப்பதால், கோவில் மூலவருக்கு உரிய ஆபரணங்களும் புதைந்திருக்கலாம் என அப்பகுதி மக்களிடையே பரபரப்பு நிலவுகிறது. இதையடுத்து, வருவாய்துறை சார்பில் சம்பந்தப்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராம உதவியாளர் ஒருவர் கண்காணிப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளார். "தொல்பொருள் ஆய்வுத்துறையினர் ஆய்வு மேற்கொள்ளும் வரை கண்காணிப்பு தொடரும் என வருவாய்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !