மாசி மகா சிவராத்திரி விழா கோவிலில் விடிய, விடிய பஜனை
அன்னுார் : அன்னுார் வட்டாரத்தில், மகா சிவராத்திரி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், 40ம் ஆண்டு சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன் தினம் இரவு, 8:00 மணிக்கு முதற்கால அபிஷேக ஆராதனையுடன் விழா துவங்கி நடந்தது. நள்ளிரவு, 12:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், 2:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடந்தது. நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது. முன்னதாக இரவு, 9:00 மணிக்கு அச்சம்பாளையம் சண்முகம் குழுவின் பஜனை துவங்கியது. நேற்று காலை, 5:00 மணிக்கு முடிந்தது.* நாரணாபுரம் ஊராட்சி, வடுகபாளையம், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழா நடந்தது. நேற்று முன் தினம் இரவு, கொலு வைக்கப்பட்டு, மகா முனிக்கு படையல் வைக்கப்பட்டது. பக்தர்கள் விநாயகர் கோவிலிலிருந்து ஊர்வலமாக தீர்த்தம் கொண்டு வந்தனர்.நேற்று அதிகாலையில் பள்ளய பூஜை நடந்தது. பெண்கள் பொங்கல் வைத்தனர். அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள், அலங்கார பூஜைகள் நடந்தன. இரு விழாக்களிலும், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.