பூச்சியூர் சிவராத்திரி விழா கோலாகலம்
பெ.ந.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள, பூச்சியூரில் சிவராத்திரி விழா, விமரிசையாக நடந்தது. பூச்சியூரில் அருள்மிகு மகாலட்சுமி, வேட்டைக்காரசாமி, வீரபத்திரர் - தொண்டம்மாள் கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜை, ஆராதனை நிகழ்ச்சிகள் நடக்கும். இந்தாண்டு நேற்று காலை, கோவிலுக்கு அருகே மைதானத்தில் இருந்து அருள்மிகு மகாலட்சுமி, வீரபத்திரர் -- தொண்டம்மாள், வேட்டைக்காரசாமி ஊர்வலம் துவங்கியது. இதில், கோவில் பூசாரி ஆணிக்கால் செருப்பு அணிந்து நடந்து வந்தார்.சுவாமிகள் ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்இவ்விழாவில், தரையில் படுத்துக் கொள்ளும் பெண்கள் மீது, பூசாரி ஆணிக்கால் செருப்புடன் நடப்பது வழக்கம். இச்சடங்கு மனித உரிமை மீறிய செயல் என்று எதிர்ப்பு கிளம்பியதால், 14 ஆண்டுகளாக இச்சடங்கு நடைபெறுவதில்லை.இதற்காக ஆண்டுதோறும் விழாவின் போது, போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபடுவது வழக்கம். நேற்று, தரையில் பெண்கள் உருளாமல் இருக்க, பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.