பாலாலயம் முடிந்தும் பணிகள் துவங்காத ஈஸ்வரன் கோயில்!
காரைக்குடி: காரைக்குடி அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான செஞ்சை ஈஸ்வரன் கோயில் பாலாலயம் முடிந்து, இரண்டு ஆண்டை கடந்த நிலையிலும் திருப்பணி தொடங்கப்படாததால் பக்தர்கள் வேதனையடைந்து வருகின்றனர். காரைக்குடி செஞ்சை நாட்டார் கண்மாய் கரையில், இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட ஈஸ்வரன் கோயில் உள்ளது. மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயில் 400 ஆண்டு பழமையானது. சிவன் சன்னதி கருங்கற்களாலும், யானை பிரிஷ்டம் வடிவம் கொண்ட கோபுரத்தை உடையது. அம்பாள் சன்னதி செம்பறாங்கற்களால் ஆனது. எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு 2 சிவன் சன்னதி, 2 அம்பாள் சன்னதி, 2 நந்தி உள்ளது. ஒரு நந்தியின் கொம்பில் தட்டினால் மெட்டல் சத்தம் வரும். மற்றொரு நந்தியின் காதில் மழை இல்லாத காலங்களில் சிறுமிகள் மழையை வேண்டி சத்தமிட்டால், மழை பெய்யும் என்பது ஐதீகம். காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்டது. ஒரு கால பூஜை நடந்து வருகிறது. இந்த கோயிலுக்கு உட்பட்டு 30 ஏக்கர் இடம் உள்ளது. இந்த இடங்கள் விவசாயத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. செஞ்சை நாட்டார் கண்மாயை நம்பி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் தங்கள் விளைச்சலின் முதல் பகுதியை ஈஸ்வரனுக்கு படைத்து வருகின்றனர்.
பழமை வாய்ந்த இந்த கோயிலை புதுப்பிக்கும் பொருட்டு, கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு பாலாலயம் நடத்தப்பட்டது. ஆகம விதிப்படி சிலைகள் அகற்றப்படாமல், உரு ஏற்றிய சுவாமி படங்களில் தற்போது வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. திருப்பணிகளை நிறைவேற்ற இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்காததால் பக்தர்கள் வேதனை அடைந்து வருகின்றனர். செஞ்சை சி.டி.பழனியப்பன் கூறும்போது: ஈஸ்வரன் கோயில் பாலாலயம் முடிந்து திருப்பணிகளை மேற்கொள்ள அறநிலையத்துறையிடம் மூன்று முறை அனுமதி கேட்டும், இதுவரை வழங்கவில்லை. பாரம்பரிய கோயில்களை பாதுகாக்கும் வகையில், இக்கோயில் திருப்பணிகளை தொடங்க அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும், என்றார். அதிகாரி ஒருவர் கூறியதாவது: 400 ஆண்டு பழமையான கோயில் என்பதால், பழமை மாறாமல் அக்கோயிலை சீரமைக்க வேண்டும். அதன்படி அந்த கோயிலை புனரமைக்க தொல்பொருள் துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். அவர்கள் வந்து பார்வையிட்டு அனுமதி தர வேண்டும். ஒவ்வொரு சன்னதி, கோயில் கோபுரம் சீரமைக்க திட்ட அறிக்கை எல்லாம் தயாராகி விட்டது. விரைவில் பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.