சூரிய கிரகணம் கூட்டமின்றி வெறிச்சோடிய பழநி கோயில்!
பழநி: நேற்று சூரிய கிரகணத்தை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் சிறப்பு பூஜைக்குக்குப்பின்,காலை 10 மணிக்கு மேல் நடைதிறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆன்மிக தலமான பழநிகோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் தரிசனத்திற்கு வழக்கமாக காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும். நேற்று சூரிய கிரகணம் அதிகாலை 5 மணி முதல் காலை 6.50 மணி வரை நிகழ்ந்த காரணத்தால் நடைதிறப்பு தாமதமானது.
மலைக்கோயில் ஞான தண்டாயுதபாணி சுவாமி கோயில் மற்றும் உபகோயில்களான திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன்கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் கிரகணம் முடிந்தபின் நடைதிறக்கப்பட்டது. கோயிலை தண்ணீர் ஊற்றி சுத்தம்செய்தபின் சம்ரோக்ஷண பூஜை நடந்தது. அதன்பின் காலை 6.30 மணிக்கு நடக்கும் விஸ்வரூப தரிசனம் காலை 8 மணிக்கும் அதைத்தொடர்ந்து சிறுகாலசந்தி, காலசந்தி பூஜைகள் நடந்தன. அதன்பின்னர் காலை 10 மணிக்கு பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ரோப்கார் காலை 7 மணிக்கு பதிலாக காலை 8.30 மணிக்கு இயக்கப்பட்டது. சூரிய கிரகணம் காரணமாக வழக்கமான பக்தர்கள் கூட்டமாக காணப்படும் பாத விநாயகர்கோயில், சன்னதிவீதி, மலைக்கோயில் வெளிப்பிரகாரம் வெறிச்சோடி காணப்பட்டது.