வேலுடையான்பட்டு கோவிலில் 23ம் தேதி பங்குனி உத்திர விழா
நெய்வேலி: நெய்வேலி வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில், வரும் 23ம் தேதி, பங்குனி உத்திர விழா நடக்கிறது. இக்கோவி லில் பங்குனி உத்திர விழா, கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவான, பங்குனி உத்திர காவடி விழா, வரும் 23ம் நடக்க உள்ளது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், வேலுடையான்பட்டு திருமண மண்டபத்தில் நடந்தது. கோவில் நிர்வாக அறங்காவலர் பழனி தலைமை தாங்கினார். தெர்மல் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, அறங்காவலர்கள் மோகன், ஞானசேகரன் மற்றும் என்.எல்.சி., பாதுகாப்பு படையின் துணைப் பொது மேலாளர் பிரசாத் முன்னிலை வகித்தனர். சப் இன்ஸ்பெக்டர் இளவரசன் வரவேற்றார். கூட்டத்தில் டி.எஸ்.பி., கலைச்செல்வன் பேசுகையில், ‘கோவிலின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், அன்னதானம் வழங்க விரு ம்புபவர்கள் முன்கூட்டியே முன் அனுமதி பெற வேண்டும். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது நடமாடினால் பொதுமக்கள், 04142– 252051 என்ற எண்ணுக்கு ரகசிய தகவல் அளிக்கலாம். பக்தர்களின் வசதிக்கேற்ப வாகன நிறுத்துமிடம் மற்றும் தற்காலிக பஸ் நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் திருட்டு சம்பவங்கள் மற்றும் விபத்துக்களை தவிர்த்திட, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.