உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரத்தில் பங்குனி உத்திர விழா கோலாகலம்

ராமநாதபுரத்தில் பங்குனி உத்திர விழா கோலாகலம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த பங்குனி உத்திர விழாவில் பக்தர்கள் காவடி எடுத்து, பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திர விழா மார்ச் 14ல் காப்பு கட்டு, கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்குனி உத்திர நாளான நேற்று காலை நொச்சிவயல் ஊரணியில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி, காவடி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். நகரின் பல பகுதிகளில் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு நீர், மோர், அன்னதானம் வழங்கப்பட்டன. இரவு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

* மண்டபம் ரயில்வே கதிர்காம சக்தி வடிவேல் முருகன், காந்தி நகர் சண்முக சடாச்சர முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் பக்தர்கள் ஓடைத்தோப்பு வழிவிடு சித்தி விநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தென் கடற்கரை விநாயகர் கோயில் சென்றனர். அங்கிருந்து காவடி, பால்குடம் எடுத்து வந்து கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். நல்லதம்பிவலசை பாலமுருகன், உச்சிப்புளி, தொருவளூர், பிரப்பன்வலசை, தேர்போகி, இலந்தைகுளம், சித்தார்கோட்டை உள்பட 54 கோயில்களில் நடந்த பங்குனி உத்திர விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

* திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயிலில் பங்குனி பிரமோத்ஸவ விழா மார்ச்., 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகந்நாதப்பெருமாள் தேரில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீர்த்தம் தெளிக்கப்பட்டு, பக்தர்கள் கூட்டத்தில் கனிகள் வீசும் நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு ஆதிஜெகந்நாதப்பெருமாளும், பட்டாபிஷேக ராமரும் சேதுக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி காண்கின்றனர்.

* ராமேஸ்வரம் மேலவாசல் முருகன் கோயிலில் நேற்று அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் புதுரோடு, நடராஜபுரம், கரையூர், இந்திரா நகர், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் பால் காவடி, வேல் காவடி, தேர் காவடி, பறக்கும் காவடி, ஆறுபடை காவடி, ஏவுகணை காவடி உள்ளிட்ட விதவிதமான காவடிகள் எடுத்துவந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

* பரமக்குடியில் பங்குனி உத்திரத்தையொட்டி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. காலை 9.30 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் மாப்பிள்ளை திருக்கோலத்துடன் கோயிலை வலம் வந்தார். தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்பு, நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து சுந்தரராஜப் பெருமாள், சவுந்தரவல்லித்தாயாருடன் மண மேடையில் ஊஞ்சலில் எழுந்தருளினர். கோயில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க மணமக்கள் சுந்தரராஜப் பெருமாளுக்கும், சவுந்தரவல்லித்தாயாருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து மணமக்கள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. கோயிலில் கூடியிருந்த ஏராளமான பெண்கள் தங்களது தாலிக்கயிற்றை புதுப்பித்து கட்டிக்கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

* முதுகுளத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், சந்தணக்காப்பு அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

* அபிராமம் அருகே மேலக்கொடுமலூர் முருகன் கோயிலிலும் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அலங்கரிக்கபட்ட தேரில் சர்வ அலங்காரத்துடன் முருகபெருமான் வலம்வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

* கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 14 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி கும்பம் எடுத்துவந்தனர். ஒவ்வொருநாளும் அம்மன் பூதம், காமதேனு, ரிஷபம், குதிரை, மயில், யானை, சிம்ம வாகனங்களில் வீதியுலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பொங்கல் விழா நடந்தது. பக்தர்கள் பொங்கலிட்டும், அக்னிசட்டி, மாவிளக்கு எடுத்துவந்தும் அம்மனை வழிபட்டனர். அன்னப்பறவை வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்தார். ஏராளமான பக்தர்கள் உடல் முழுவதும் சேறு பூசி சேத்தாண்டி வேடமிட்டும், பூக்குழி இறங்கியும், பால்குடம் எடுத்துவந்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

* தில்லையேந்தல் தட்டார்மடம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 84வது ஆண்டு பங்குனி உத்திரவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

* தட்டாந்தோப்பு வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் 38வது ஆண்டு பங்குனி உத்திரவிழா நடந்தது. பக்தர்கள் முத்துச்சாமிபுரம் ஆதிவிநாயகர் கோயிலில் இருந்து பால்குடம், காவடி, தீச்சட்டிகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோயிலை அடைந்தனர். தொடர்ந்து அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !