திருவள்ளூர் வீரராகவருக்கு புட்லூரில் திருமஞ்சனம்
புட்லுார்: திருவள்ளூர் வீரராகவ பெருமாளுக்கு, புட்லுாரில் நேற்று திருமஞ்சனம் நடந்தது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாணம் முடிந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, வீரராகவ பெருமாள் திருவாபரணம் அணிந்து, புட்லுார் கிராமத்திற்கு சென்று வருவது ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அதன் படி, நேற்று அதிகாலை, திருவூறல் உற்சவத்திற்காக வீரராகவ பெருமாள், புட்லுார் புறப்பட்டு சென்றார். காக்களூர் வழியாக சென்ற வீரராகவ பெருமாளை, வழிநெடுக பக்தர்கள் வரவேற்றனர். பின். புட்லுார் கூவம் ஆற்றின் கரையோரம் உள்ள கோவில் மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார். பிற்பகல், 2:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பின் நேற்றிரவு, புட்லுார் முக்கிய வீதிகளில் உற்சவர் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, அதிகாலை, திருவள்ளூர் திரும்பினார்.