உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயில் ஆவணி மூலத் திருநாள் கொடியேற்றம்

நெல்லையப்பர் கோயில் ஆவணி மூலத் திருநாள் கொடியேற்றம்

திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயில் ஆவணி மூலத்திருநாள் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நெல்லையப்பர் கோயில் ஆவணி மூலத் திருநாள் திருவிழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்தஆண்டு இத்திருவிழா கொடியேற்றுத்துடன் துவங்கியது. இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு வரும் 30ம்தேதி இரவு 8மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சிறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மர மயில் வாகனத்திலும் மற்றும் சண்டிகேஸ்வரர், பஞ்சமூர்த்திகளுடன் நான்கு ரத வீதிகளிலும் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. செப்.4ம்தேதி இரவு 9 மணிக்கு கரூர் சித்தர் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வீதி உலா சென்று, சங்கரன்கோவில் ரோடு வழியாக மானூர் அம்பலவாண சுவாமி கோயிலை சென்றடைகிறது. ஆவணி மூலத்திருநாளின் 10ம் நாளான வரும் 5ம்தேதி இரவு 1மணிக்கு கோயிலிலிருந்து சந்திரசேகர், பவாணி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேஸ்வரர், தாமிரபரணி, அகஸ்தியர், குங்குலியகலிய நாயனார் மூர்த்திகள் பல்லக்கிலும், சப்பரத்திலும் நான்கு ரத வீதிகளில் வீதி உலாச் சென்று, சங்கரன்கோவில் ரோடு வழியாக ராமையன்பட்டி, ரஸ்தா வழியாக மானூருக்கு 6ம்தேதி காலை 5மணிக்கு சென்றடைகிறது. 6ம்தேதி மானூர் அம்பலவாண சுவாமி கோயிலில் கரூர் சித்தருக்கு சாபவிமோசனம் நிவர்த்தி செய்து வரலாற்று புகழ் மிக்க புராணப் பாடல் பாடப்பெற்று, ஆவணி மூலம் மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் கவிதா ப்ரியதர்ஷினி, நிர்வாக அதிகாரி கசன்காத்த பெருமாள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !