திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கந்தன்பாளையம் திரவுபதியம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் நேற்று நடந்தது. பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் ஊராட்சி கந்தன்பாளையம் கிராமத்தில் உள்ள கற்பக விநாயகர், வரசித்தி விநாயகர், சாந்த காளியம்மன், காமாட்சியம்மன், புற்றுவாய் அம்மன், ஸ்ரீமுத்துமாரியம்மன், திரவுபதி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதனையொட்டி கடந்த இருநாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று அதிகாலை யாகசாலை பூஜை, பூர்ணாகுதி நடந்து, காலை 8:00 மணியளவில் கடம் புறப்பாடாகி 9:00 மணிக்கு புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீ முஷ்ணம் பூவராகசுவாமி கோவில் வளாகத்தில் உள்ள குழந்தையம்மன் (சப்தகன்னிகள்) மற்றும் சாவான் கோவில்கள் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதனையொட்டி கடந்த 1ம் தேதி மாலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை நடந்தது. 2ம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனலட்சுமி ஹோமம், வித்யாலட்சுமி பூஜை நடந்தது. மாலை முதல் கால யாகபூஜை, திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. நேற்று காலை கும்ப கணபதி பூஜை, கோ பூஜை, சூரிய பூஜை, இரண்டாம் கால யாகபூஜை, நடந்தது. பின்னர் கடம் புறப்பாடாகி காலை 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனைகள் நடந்தது. ரவிசுந்தர் சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். விழா ஏற்பாடுகளை பூவராகசுவாமி கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், செங்குந்தர் தெரு பொதுமக்கள் செய்திருந்தனர்.