ராமபாதத்தின் மகிமை
சீதாதேவியை ராவணன் மட்டுமே கடத்தினான் என நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அதற்கு முன்னதாக விராதன் என்ற அரக்கனும், அவளது அழகில் மயங்கி விண்வழியே கடத்திச் சென்றான். ராமனும், லட்சுமணனும் அவனுடன் போரிட்டனர். ராமன் தன் வில் நாணை இழுத்து, அம்பை பொருத்த எத்தனித்த போது, அம்பு சரியாகப் பொருந்ததால், நாண் விடுபட்டு பெரும் ஒலி எழுந்தது. அந்த பேரொலி கேட்டு பயந்து போன விராதன், சீதையை விட்டுவிட்டான். இருப்பினும் ராமனும், லட்சுமணனும் அவனை விடவில்லை. அவனை வெட்டினர். வெட்டுக்காயத்துடன் கீழே விழுந்த அவனது விரல் ஒன்று ராமனின் பாதத்தை தொட்டபடியே விழுந்தது. அம்மாத்திரத்திலேயே அவனது அரக்க உருவம் மாறிவிட்டது. அவன் தேவலோகத்தில் வாழ்ந்தவன். தும்புரு என்ற பெயர் கொண்ட அவன் இசையில் வல்லவன். ஒருமுறை தேவகன்னி ரம்பையுடன் தகாத உறவு கொண்டு, இந்திரனால் சபிக்கப்பட்டான். ராமனின் பாதத்தை எப்போது தொடுகிறாயோ அப்போது விமோசனம் கிடைக்கும் என்றான். அதுபோலவே இப்போது விமோசனமும் கிட்டிவிட்டது. நம்மை துன்புறுத்துபவர்களையும் மன்னிக்க பழக வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் வலியுறுத்துகிறது.