கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை விழா துவக்கம்!
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சாகை வார்த்தலுடன் சித்திரை பெருவிழா துவங்கியது. விழாவை முன்னிட்டு, கஞ்சி கலயங்களை பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு நேற்று முன்தினம் படையலிட்டனர். முக்கிய திரு விழாவாக, 19ம் தேதி இரவு, சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகின்ற திருநங்கைகள், பூசாரிகளின் கையால் தாலிக் கட்டிக்கொண்டு, இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர். மறுநாள் 20ம் தேதி, காலை 6:30 மணிக்கு, ÷ தரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து நத்தம், தொட்டி வழியாக தேர் பந்தலடிக்கு சென்றடையும். அங்கு மதியம் 12 மணிக்கு நடக்கும் அழுகளம் நிகழ்ச்சியில், திருநங்கைகள் தாங்கள் அணிந்திருந்த தாலியை அறுத்தெறிந்து, விதவைக் கோலம் பூண்டு, அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளித்து விட்டு, தங்கள் ஊருக்கு திரும்புவர். தொடர்ந்து 22ம் தேதியன்று, தர்மர் பட்டாபிஷேகத்துடன், சித்திரை பெருவிழா நிறைவடைகிறது.